பகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்?? 

கைவிரிக்கும் அரசால், பகுதிநேர ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர். 


இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் கூறியதாவது : 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் கடந்த 2012ல் ரூ.5000 தொகுப்பூதியத்தில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு வாரத்திற்கு 3 அரைநாட்கள் என மாதத்திற்கு 12 அரைநாட்கள் பணிபுரியுமாறு உத்தரவிடப்பட்டது. இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல், கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி உள்ளிட்ட பாடங்களை 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகின்றனர். 


இவர்களில் 58 வயதை பூர்த்தி செய்தவர்கள், விபத்து, இயற்கை மரணமடைந்தவர்கள், வேறு பணிக்கு சென்றவர்கள் என பல்வேறு காரணங்களால் சுமராக 4000பேர் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டு தற்போது 12000பேர் மட்டுமே இவ்வேலையில் தொடர்கிறார்கள்.

ஒப்பந்த தொகுப்பூதிய வேலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு சரிவர தரப்பட்டிருந்தால் தற்போது சுமாராக ரூ.10000 மாதசம்பளமாக கிடைத்திருக்கும். ஆனால் மறைந்த முதல்வரால் ரூ.2000மும், தற்போதைய முதல்வரால் ரூ.700ம் என இந்த 7 ஆண்டுகளில் இதுவரை ரூ.2700 மட்டுமே ஊதிய உயர்வு தரப்பட்டது. இதனால் ரூ.10000க்கும் குறைவான சம்பளமாக ரூ.7700 தற்போது தரப்படுகிறது

சட்டப்படி அமுல்செய்ய வேண்டிய P.F E.S.I. மற்றும் போனஸ்கூட நடைமுறையில் இல்லை என்பதே பகுதிநேர ஆசிரியர்களின் மிகப்பெரிய கவலை.

இதுதவிர 8 கல்வி ஆண்டுகளில் மே மாத கோடைகால விடுமுறைக்கு இவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.45700 தரப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது.


ஊதிய உயர்வு மற்றும் சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் கேட்டு இதுவரை கவர்னர், 3 முதல்வர்கள், 7 கல்வி அமைச்சர்கள், பள்ளிக்கல்வித்துறை செயலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர்கள் என அனைவரிடமும் கடந்த ஏழு வருடமாக தொடர்ந்து கோரிக்கை மனுக்களை நேரிலும், கடிதம் மூலமாக முறையிட்டு வந்தாலும் அரசு கைவிரித்து வருகிறது. பள்ளிப்பணிகளில் எல்லா வகையிலும் முழுஅளவில் பயன்படுத்தப்பட்டுவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் செய்வதுகுறித்து அரசின் கொள்கைமுடிவினை வெளியிடாததால் வாழ்வாதாரம் சுரண்டப்படுவதாக அதிர்ச்சி அடைந்து வருகிறோம்.


ஒவ்வொரு முறையும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டும், அரசின் திட்டவேலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டும் இதுவரை போனஸ்கூட வழங்குவதில்லை. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் உள்ள பிற  தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் போனஸ் தொடர்ந்து கிடைத்திடும்போது அதிலுள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டும் கொடுக்காமல் இருப்பதால் வேதனையில் தவித்து வருகிறார்கள். எந்த உரிமையும் கோரமுடியாத அரசாணையால் அரசின் எந்த சலுகை பெறமுடியாத ஏக்கத்தில் தவித்து வருகின்றனர். ஆனால்  பள்ளிக்கல்விதுறை செயலர், அனைவருக்கும் கல்வி இயக்க இயக்குநர், மற்றும் கல்விஅமைச்சர் என யாருமே இதனை கண்டுகொள்வதில்லை. முதல்வரின் கவனத்திற்கும் இவர்களின் கோரிக்கைகளை கொண்டு சென்றதில்லை. கடந்த 7 வருடங்களாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பத்திற்கும் இந்த முறையாவது பொங்கல் போனஸ் கிடைத்திட மனிதநேயத்துடன் முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுவருகிறோம். 


 7வது ஊதியக்குழு அரசாணைப்படி 30% ஊதிய உயர்வை கேட்டால் நிதியில்லை என்றும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு இது பொருந்தாது  என்றும் அரசும், அதிகாரிகளும் சொல்லிவருவதால் பகுதிநேர ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாவதாக பார்க்கப்படுகிறது.

 

மேலும் ஆந்திர மாநிலத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு  மாதம் ரூ.14203 தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. அதோடு அங்கு ஒப்பந்த தொகுப்பூதிய பணியில் உள்ள பெண்களுக்கு 6 மாத ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பும் வழங்கப்படுகிறது. 


மேற்கு வங்கத்தில் ஒப்பந்த வேலையில் உள்ளவர்கள் இறந்துபோனால் ரூ.2 இலட்சம் மாநில அரசால் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழத்திலும் இதே ஊதியமும், இதர சலுகைகளும்  அரசு வழங்காமல் இருந்துவிட்டதாக கவலையில் வருந்துகிறோம்.


பணிநிரந்தரம் செய்யும்வரை 7வது ஊதியக்குழு அறிக்கைபடி மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியமான ரூ.18000த்துடன் P.F(சேமநலநிதி), E.S.I, விடுப்பு சலுகைகளோடு அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரப்பணி வழங்கவேண்டும் எனக் கேட்டுவருகிறோம்.


மீண்டும் பழைய ஓய்வூதியம் மற்றும் சமவேலை சமஊதியம் கேட்டு கடந்த சில ஆண்டுகளாக பல கட்டங்களாக நடந்த ஜாக்டோஜியோ கூட்டமைப்பின் போராட்ட நாட்களில் அவற்றை முறியடித்து பள்ளிகளை முழுஅளவில் நடத்திட அரசு பகுதிநேர ஆசிரியர்களையே முழுநேரமாக பயன்படுத்தி வந்தது. அதற்கென தனியே ஊதியம் எதுவும் அரசு வழங்கியதில்லை. தற்போது ஜாக்டோஜியோ மீண்டும் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டு தயராகி வருகிறது. இந்த நிலையில் பண்டிகை போனஸ், ஊதிய உயர்வு, விடுமுறை சலுகைகளுடன் அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரப்பணியை அரசு வழங்கவேண்டும்  என்ற நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற தமிழக அரசை, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. 


TRB (ஆசிரியர் தேர்வாணையம்) உச்சநீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள் மற்றும் 1325 சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, ஓவியம்,இசை, தையல்) தேர்வு செய்யும்போது பகுதிநேர ஆசிரியர்களை தேர்வுசெய்வதில்லை. இதில்  சமகல்வித்தகுதியுடன் இப்பாடப்பிரிவுகளில் கடந்த 2012 முதல் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களை அந்த காலிப்பணியிடங்களில் கருணையுடன் நியமிக்கவும் இல்லை. குறைந்தபட்ச முன்னுரிமைகூட வழங்கவில்லை. கல்வித்துறையினர் இதற்கு முன்பு இதுபோல நடந்தது கிடையாது என்பது குறிப்பிடதக்கது.


டெல்லி மாநில அரசு எஸ்.எஸ்.ஏ.வில் ஒப்பந்தத்தில் பணிபுரியும் 15000 தொகுப்பூதிய ஆசிரியர்களை கல்வி மேம்பாட்டிற்காக பணிநிரந்தரம் செய்திட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். தமிழக்திலும் பகுதிநேர ஆசிரியர்களை கல்வித்தகுதிக்கேற்ப சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்திட சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.

தினக்கூலிகளாக பணியமர்த்தி இருந்தால்கூட இந்நேரம் நிரந்தரம் செய்யப்பட்டிருப்போம். இந்த 8 கல்வி ஆண்டுகளில் 76 மாதங்கள்(900 அரைநாட்கள் / 450 நாட்கள்)  பணிபுரிந்திருந்தும், அரசு இது திட்ட வேலை, ஒப்பந்த வேலை என சொல்லி கைவிரித்து வருவதை பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பநலன்கருதி அரசின் கொள்கை முடிவினை ஏழைமக்களின் வாழ்வாதாரம் முன்னேற்ற 12000 பேரையும் கல்வித்தகுதிக்கேற்ப சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணிஅமர்த்த வேண்டும் என்பதே ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியரின் வேண்டுகோள் ஆகும். எனவே அரசு இதனை உடனடியான நிறேவேற்றி தரவேண்டும்.

தமிழக பட்ஜெட் வரும் -மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது. இப்பட்ஜெட்டுக்கு முன்பே காலமுறை ஊதியத்தில் 12000 பகுதிநேர ஆசிரியர்களை(PET, ART, COMPUTER Etc.,) பணிஅமர்த்த வேண்டி தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மேலும் அவரை தொடர்புகொள்ள :-

சி.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல் 9487257203

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *